தமிழ்நாடு

`ஓசில பயணம் செய்றாங்க என விளையாட்டா சொன்னேன்’- அமைச்சர் பொன்முடி விளக்கம்

webteam

பேருந்தில் பெண்கள் ஓ.சியில் செல்கிறீர்கள் என அமைச்சர் பொன்முடி பேசியது தொடர்பான வேள்விக்கு, “விளையாட்டாக பேசியதை பெரிது படுத்த தேவையில்லை” என அமைச்சர் பொன்முடி மழுப்பலாக பதலளித்தார்.

தமிழ்நாடு பொறியியல் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைகழக தொழில் நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி, ஆய்வு மேற்கொண்டு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு பொறியியல் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 14,153 பேர் தயாராக உள்ளனர். பொறியியல் சேவையில் சேர்வதற்கான எண்ணிக்கை 5,016. 10,351 மாணக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர்ந்து விட்டார்கள். வரும் 13ம் தேதி 3-வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கலந்தாய்வில் அதிகம் ஈடுபடுகிறார்கள். நான்கு சுற்றுகளும் நிறைவடைந்ததும் முதலாம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்பு தொடங்கும். பொறியியல் சேர்க்கை இந்த வருடம் எந்த ஒரு பிரச்சினைகளும் இருக்காது. சிறப்பாக நடைபெறும். பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்படும், 8ம் தேதி கலந்தாய்வு ஒரே கட்டமாக நடைபெறும். 4 கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபர் இறுதியில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்.

நீட் தேர்வு போன்ற காரணங்களால் பொறியியல் கலந்தாய்வு மற்றும் வகுப்புகள் துவங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிலேயே கலை அறிவியல் கல்லூரியில் சேர்ப்பதற்கு அந்தந்த கல்லூரி முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்படும்” என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் அவரது முந்தைய சர்ச்சை பேச்சு தொடர்பாக (மகளிருக்கான இலவச பேருந்தை குறிப்பிட்டு, பெண்களெல்லாம் `ஓசில பயணம் செய்றீங்க’ என்பது) என குறிப்பிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அது விளையாட்டாக சொன்னதுதான். அதை பெரிதுபடுத்த தேவையில்லை” என்று மழுப்பலாக கூறினார்.