1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறையின் அமைச்சராக பொன்முடி செயல்பட்டார். அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் சென்னை, சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் பகுதியில் 3,630 சதுர அடி அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அவர் அபகரித்ததாக கடந்த 2003 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அவர்மீது வழக்கு பதிவு செய்தது.
எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு அமைச்சர் பொன்முடி மேலும் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக கடந்த 2007 ஆம் ஆண்டு அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், “இந்த வழக்கில் பொன்முடி போலி ஆவணங்கள் கொண்டு நிலத்தை கையகப்படுத்தியதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதன் காரணமாக இந்த வழக்கை விசாரிக்க அனுமதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க 2017 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்யும் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட சாட்சியங்களை அழைத்து விசாரணை செய்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கிற்கான தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார். அவருடைய தீர்ப்பில் முக்கிய சாராம்சமாக, “10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போதுவரை போதிய ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சமர்பிக்கப்படவில்லை” எனக் கூறப்பட்டது. இதைக்குறிப்பிட்ட நீதிபதி, 10 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்துள்ளார்.
இந்த வழக்குல் குற்றம் சாட்டப்பட்ட நபர்களாக அமைச்சர் பொன்முடி, தற்போதைய சென்னை மாநகராட்சியின் துணை மேயராக இருக்கக்கூடிய மகேஷ்குமார் இருந்தனர். லஞ்ச ஒழிப்புத்துறையினர் இதில் மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.