அதிமுக தலைமை மீது குற்றம் சாட்டிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி விலை போய்விட்டதாகவும், அவரை பின்னாலிருந்து வேறு யாரோ இயக்கி வருவதாகவும் தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
முன்னதாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத சிலர் கட்சியின் தலைமையை கைப்பற்ற முயலுவதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் மீது குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுகவின் வளர்ச்சியில் திவாகரனின் பங்கை யாராலும் மறுக்க முடியாது. மேலும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் செய்த உதவியையும் யாராலும் மறக்க முடியாது என்று தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற கருத்துகளை கட்சியின் தலைமையிடம் தெரிவிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் பேசுவது முறையாக இருக்காது என்று குறிப்பிட்ட ஓ.எஸ்.மணியன், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறும் கே.பி.முனுசாமி விலைபோய்விட்டதாகவும், அவரை பின்னால் இருந்து இயக்குவதாகவும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றம்சாட்டினார்.