இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “முதலமைச்சரின் ஆலோசனைபடி ஒவ்வொரு மாவட்டத்திலும் பல நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் அதிகாரிகள் அதிக கவனம் எடுத்து செய்து வருகின்றனர். தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் 68 பேருக்கு 37.50 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட டார்கெட்டை விட கூடுதலாக நல்லது செய்யும் வகையில் ஒவ்வொரு திட்டத்திலும் அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
கோவை மாநகரில் உள்ள பிரச்னைகளை தீர்க்க வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல பணிகளை தொடர்ந்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மருதமலை கோவிலுக்குச் செல்ல போக்குவரத்து வசதி குறைவாக உள்ளது. கூட்ட நெரிசல் தவிர்க்கும் வகையில் வாகன நிறுத்துமிடம் 8 ஏக்கரில் அமைக்கப்படும். Peak Hour மின்கட்டணம் தொடர்பாக துறை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும்.
டாஸ்மாக் கடை தொடர்பாக சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக ஒருமாத கால அவகாசம் கேட்டுள்ளோம். டாஸ்மாக் கடைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் தொடர்பாக தவறாக கருத்துகள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. ஒருமாத காலத்தில் டாஸ்மாக் தொடர்பான பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்”
அமைச்சர் உதயநிதியின் சனாதன கருத்துபற்றி..
“பாஜக சொல்வதை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தால், மக்கள் பிரச்னைகளை கவனத்தில் கொண்டு செயல்பட முடியாது. உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை அறிவிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்தில் தவறான அறிவிப்பு. இதுகுறித்து மக்கள் முடிவெடுக்க வேண்டும்”
“குடிநீர் பிரச்னை.. ஒரு மாதத்தில் தீர்வு!”
“முதலமைச்சர் ஸ்டாலின் வருகின்ற 24 ஆம் தேதி திருப்பூருக்கு வருகை தர உள்ளார். கோவைக்கு முதலமைச்சர் ஆய்வு செய்ய வருவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். கோவை மாநகராட்சி வார்டுகளில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்னைக்கு ஒருமாத காலத்தில் முழுமையாக தீர்வு காணப்படும்” என்று தெரிவித்தார்.