தமிழ்நாடு

’’இலவசங்கள் தவறு என்னும் வாதமே தவறு’’ - அமைச்சர் மா. சுப்பிரமணியன் கருத்து

’’இலவசங்கள் தவறு என்னும் வாதமே தவறு’’ - அமைச்சர் மா. சுப்பிரமணியன் கருத்து

webteam

இலவசங்கள் தவறு என்னும் வாதம் தவறு. யாருக்கு கொடுக்கிறோம் என்பது முக்கியம். இதனை சரியாக செயல்படுத்தியதால் தான் இன்று தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 126 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதும் அரசின் சார்பில் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டம் தொடங்கி மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மிதிவண்டிகளை விட வலுவான தரமான மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனாவில் இருந்து முழுமையாக வெளியில் வந்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 1 லட்சம் என்ற கணக்கில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பானது சற்று அதிகமாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 500 நபர்களுக்கு கீழ்தான் கொரோனா பாதிப்பு உள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.

செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்குவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்கிறது. அதன் பின்னர் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி போட்டுக்கொள்ளும் சூழல் இருப்பதால் மக்கள் தற்போதே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெற்று வந்த கொரோனா தடுப்பு சிறப்பு முகாமை அடுத்த மாதம் முதல் வாரம்தோறும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இலவசங்கள் தவறு என்னும் வாதம் தவறு. யாருக்கு கொடுக்கிறோம் என்பது முக்கியம். இதனை சரியாக செயல்படுத்தியதால்தான் இன்று தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு மருத்துவத்துறை ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக போட்டி நடைபெற்றது. தற்போது சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச டென்னிஸ் போட்டி உட்பட சர்வதேச போட்டிகள் அனைத்தும் சிறப்புடன் நடைபெற மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை முழு ஒத்துழைப்பு வழங்கும்" என தெரிவித்தார்.