அமைச்சர் மா.சு புதியதலைமுறை
தமிழ்நாடு

“டாக்டர்.. உங்க ஷிப்ட் என்ன? எங்க இருக்கீங்க?” - நடைப்பயிற்சியின் போது ஆய்வுக்குசென்ற அமைச்சர் மா.சு

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடைபயிற்சி உடையில் சென்று, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

PT WEB

செய்தியாளர் - கே.ஆர்.ராஜா

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதற்காக நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தார் அவர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் உளுந்தூர்பேட்டையில் இருந்து கடலூர் மாவட்டம் பாலக்கொல்லை வரை, நடைபயிற்சிக்கான உடையை அணிந்து கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அப்பகுதியில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீரென ஆய்வு செய்ய சென்றார் மா.சு. அப்போது அங்கு ஒரு சில செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, அங்கிருந்த அனைத்து பதிவேடுகளையும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தார். அப்போது “பணியில் எத்தனை டாக்டர்கள் இருக்கின்றனர்?” என அமைச்சர் கேட்க, அங்கிருந்த செவிலியர்கள் “2 டாக்டர்கள்” என தெரிவித்தனர்.

பின்னர் “இங்கு வட்டார மருத்துவ அதிகாரி யார்? அவர் எத்தனை முறை இந்த மருத்துவமனைக்கு வந்துள்ளார்? மாவட்ட துணை சுகாதார இயக்குனர் யார்? அவர் எத்தனை முறை வந்துள்ளார்?” என கேட்டறிந்தார். மேலும், இதுவரை எத்தனை நோயாளிகள் வந்து சென்றுள்ளனர் என்பது குறித்தும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மாத்திரைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

அப்போது பதிவேட்டில் இருந்த வீரப்பன் என்ற நோயாளி ஒருவருடைய செல்போன் நம்பரை கண்டு, அவரை தொடர்பு கொண்டு, “நீங்கள் ஆகஸ்ட் மாதம் நெஞ்சு வலிக்கு மாத்திரை வாங்கி உள்ளீர்கள். அப்படித்தானே?” என கேட்டார். அதற்கு வீரப்பன் “ஐந்து மாதங்களுக்கு முன்பு வாங்கினேன்” என்றுள்ளார். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் “இப்பொழுது நன்றாக இருக்கிறீர்களா?” என நலம் விசாரித்தார்.

தொடர்ந்து அந்த மருத்துவமனையின் மருத்துவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர், “உங்கள் பணிக்கான நேரம் என்ன? உங்கள் வீடு எங்கே உள்ளது?” என்று கேட்டார். அதற்கு டாக்டர் “போனில் 9 - 4 மணி, நெய்வேலியில் வசிக்கிறேன்” என கூறினார். அப்பொழுது “இந்த மருத்துவமனை எவ்வளவு பரப்பளவில் அமைந்துள்ளது? மருத்துவமனையை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க கடிதம் கொடுங்கள். ஒன்பது மணிக்கு மருத்துவமனைக்கு வந்து விடுங்கள்” என கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்தார்.

அதனைத் தொடர்ந்து மக்களைத் தேடி மருத்துவத்தில் பயன்பெறும் மூதாட்டி ஒருவரின் வீட்டிற்கு சென்று, அவருடன் கலந்துரையாடி நலம் விசாரித்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் நடை பயிற்சியை தொடங்கி, சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உளுந்தூர்பேட்டைக்குச் சென்றார். அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடைபயிற்சி உடையில் சென்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது..