தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.75 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த ஹீமோபிலியா மற்றும் ஹீமோகுளோபினோபதி பராமரிப்பு மைய கட்டடம், ரூ.20 கோடி மதிப்பிலான 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் ஆகியவை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று மருத்துவப் படிப்பு முடித்த 101 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.75 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த ஹீமோபிலியா மற்றும் ஹீமோகுலோபினோபதி பராமரிப்பு மைய கட்டடத்தை திறந்த வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். காரணம் மலைவாழ் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்ட இந்த தருமபுரி மாவட்டத்தில், தமிழகத்திலேயே முதன் முறையாக இந்த பராமரிப்பு மைய கட்டடம் திறக்கபட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் மாவட்டம்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என சிறப்பான திட்டத்தை கொண்டு வந்தார். அதன் அடிப்படையில் இன்று இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரி உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. மேலும் மாணவ மாணவிகள் மருத்துவப் படிப்பு முடித்தவுடன் அரசு வேலையில் சேர தமிழக முதல்வர் சிறப்பான வழிவகையை செய்து வருகிறார்.
தற்போது தமிழகத்தில் 1021 மருத்துவப் பணி காலியாக உள்ளது. இந்த பணிக்கு 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திறமையான மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் குழுவினர் அவர்களை பல்வேறு தேர்வுகள் நடத்தி தேர்வு செய்ய உள்ளார். இந்த பணி இன்னும் 20 நாட்களில் முடிவுறும். ஒரு ரூபாய் கூட கையூட்டு இல்லாமலும், இடைத்தரகர்கள் தொந்தரவு இல்லாமலும், நேரடியாக பணி அமர்த்தப்பட உள்ளனர்
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிட மாறுதல் வெளிப்படையாக நடைபெற்று வருகிறது” என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, மருத்துவக் கல்வி ஆராய்சி இயக்குனர் சாந்தி மலர், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவள்ளி உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.