மா.சுப்பிரமணியன், எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

“எடப்பாடி பழனிசாமியா அல்லது எரிச்சல் சாமியா?”- இபிஎஸ் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் மா.சு எதிர்வினை!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் செயல்பாடுகளை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கைக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Angeshwar G

எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “மக்கள் நல்வாழ்வுத்துறை மக்களின் உயிர் காக்கும் துறையா? அல்லது மக்களின் உயிரைப் பறிக்கும் துறையா? என்ற சந்தேகம் அப்பாவி மக்களின் மனதில் எழுந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவத்துறையில் நடக்கும் தவறுகளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சுட்டிக்காட்டும் நிலையில், அதைத் தீர்க்காமல் எனக்கு முரண்பாடான பதில்களை அளிப்பதிலேயே அமைச்சர் மா.சுப்பிரமணியன் செயல்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார். அதேபோல கால்பந்து வீராங்கனைக்கு தவறான சிகிச்சை, காவலர் மகளுக்கு தவறான சிகிச்சை, சளி தொல்லைக்கு நாய் கடி ஊசி, மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சியில் இளம் பொறியியல் மாணவர் உயிரிழந்த நிகழ்வு என பல்வேறு விஷயங்களை தனது அறிக்கையில் பட்டியலிட்டிருந்தார் இபிஎஸ்.

மேலும், “சட்டவிரோதமாக செயல்பட்டு குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த யுடியூபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று முதலில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த அமைச்சர், தற்போது கொலைக்குற்றமா என்று பத்திரிகையாளர்களிடமே கேள்வி கேட்கிறார். ஏற்கனவே யூ டியூபர் இர்ஃபான் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை என்பது புரியாத புதிர்” என விமர்சித்திருந்தார்.

MaSubramanian TNGovt

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமி? அல்லது எரிச்சல் சாமியா? என்ற அளவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மீது அவதூறு பரப்புகிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்பதை உணராமல் காழ்ப்புணர்ச்சியால் அறிக்கை விடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர் காய நினைக்காதீர்கள். திராவிடமாடல் அரசின் மருத்துவத்துறையின் சாதனை ஐக்கிய நாடுகள் சபையால் பாராட்டப்பட்டுள்ளது. இந்த விருது உலக அளவில் உட்சபட்ச அங்கீகாரம் என்பதை அவர் அறிந்திருப்பாரா என்பது ஐயமே..” என தெரிவித்துள்ளார்.