தமிழ்நாடு

ஆளுநர் தனிச்சையாக முடிவு எடுத்திருக்கக்கூடாது - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஆளுநர் தனிச்சையாக முடிவு எடுத்திருக்கக்கூடாது - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

Sinekadhara

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதில் ஆளுநர் தனிச்சையாக முடிவு எடுத்திருக்கக்கூடாது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

அனைத்துக்கட்சி கூட்ட தீர்மானத்தின்படி சட்டமன்ற சிறப்புக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. 142 நாட்களுக்குப்பின் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 1ஆம் தேதி சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார். அதற்கு, கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்தது அல்ல என சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதா சட்டமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து நீட் விலக்கு மசோதா தொடர்பாக விளக்கமளித்தார். அதில், ‘’ செப்டெம்பர் 13இல் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை 142 நாட்களுக்குப் பிறகு மறுபரிசீலனைக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுத்து மசோதாவை திருப்பியனுப்பியுள்ளார். ஏ.கே.ராஜன் குழு அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே கொண்டுவரப்பட்ட மசோதா என்ற ஆளுநரின் கருத்து தவறானது. ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுத்திருக்கக்கூடாது.

நீட் விலக்கு மசோதா தொடர்பான ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானவை. பயிற்சி மையங்களில் படித்தவர்கள் மட்டுமே வெற்றிபெறும் வகையில் நீட் தேர்வு உள்ளது. பொதுமக்களிடம் கருத்து கேட்டபிறகே நீட் விலக்கு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அரசியலமைப்பின்படி ஆளுநர் செயல்படாமல் தன்னிச்சையான கருத்துகளை கூறியது சரியல்ல. பலமுறை தேர்வு எழுதுவோருக்கு நீட் தேர்வு சாதகமாக உள்ளது. ஆளுநரின் கருத்துகள் உயர்மட்டக்குழுவின் அறிக்கையை அவமானப்படுத்துவது போன்று அமைந்துள்ளது. ஏ.கே. ராஜன் அறிக்கையில் பல்வேறு அனுமானங்கள் உள்ளதாக கூறிய ஆளுநரின் கருத்து தவறானது. நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவை ஆளுநர் அவமதித்துவிட்டார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூறி, சட்டமே இயற்றக்கூடாது என ஆளுநர் கூறுவது அரசியலமைப்புக்கு எதிரானது. உயர்கல்வி மாணவர் சேர்க்கை அதிகாரம் ஒன்றிய அரசிடம் அடங்காது என உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. மாணவர் சேர்க்கை மற்றும் கட்டணம் தொடர்பான விதிகளை மாநில அரசுகளே வகுக்க முடியும் என வழக்கு ஒன்றில் நீதிபதி பானுமதி கூறியுள்ளார்’’ என்று விளக்கிய மா.சுப்பிரமணியன் மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தில் மீண்டும் தாக்கல் செய்தார்.