அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை கிண்டியில் நேற்று நடைபயிற்சி செய்துள்ளார். அப்போது, தெருவோரம் காகிதங்களை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்த திருச்சியைச் சேர்ந்த ராஜா என்பவர், அமைச்சரைப் பார்த்து வணக்கம் தெரிவித்துள்ளார். அவரை அருகே அழைத்து விசாரித்தபோது, தனது கையறு நிலை குறித்து அவர் அமைச்சரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, ராஜாவை தனது வாகனத்தில் அழைத்துச் சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன், அவரை குளிக்கச் சொல்லி, உணவும் உடைகளும் வழங்கியுள்ளார். பின்னர் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
இறுதியாக திருச்சி ராஜாவின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், அதே மருத்துவமனையில் 12,000 ரூபாய் மாத ஊதியத்தில் தற்காலிக பணியாளராக அவருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, அமைச்சர் மா. சுப்பிரமணியன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஒரு வணக்கம் கூறியதால், ஒருவரின் வாழ்க்கை ஓஹோவென மாறிய இந்த ருசிகர சம்பவம், பலரின் பாராட்டையும் பெற்றுவருகிறது.