அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“தண்ணீர் பந்தல் கூட அமைக்க முடியவில்லை” – தேர்தல் ஆணையம் மீது அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சனம்

இந்த கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைப்பதற்குக் கூட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் மீது அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சனம் செய்துள்ளார்.

webteam

செய்தியாளர்: சுகன்யா மெர்சி பாய்

கலைஞர் கணினி கல்வியகம் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் மாணவர்கள், இளையோருக்கான கட்டணமில்லா ஆங்கில பேச்சுப் பயிற்சி முகாம் தொடக்க விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.

மா. சுப்பிரமணியன்

அப்போது பேசிய அவர்... “கலைஞர் கணினி கல்வியகம் 2020 ஜனவரி 5 ஆம் தேதி, தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது, கலைஞர் கணினி கல்வியகம் தொடங்கி 4 ஆண்டுகளில் 9 பிரிவாக நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில் 830 மாணவ, மாணவியர் பயின்று வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்த கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைப்பதற்குக் கூட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை. தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டது என்பதால் மக்களின் அடிப்படை தேவைகளை செய்ய தேர்தல் ஆணையம் தளர்வு அளித்திருக்கலாம். ஆனால் தரவில்லை.

மக்களுக்கு பயன்படும் இந்த பயிற்சி வகுப்பு நிகழ்சியை நடத்துவதற்கு கூட காவல்துறை, தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவற்றை நாடி அனுமதி கேட்க வேண்டிய மோசமான நிலை உள்ளது.

தேர்தல் ஆணையம்

நான் மருத்துவத் துறை அமைச்சர். ஆனால் யாராவது உடல் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றால் மருத்துவமனை நிர்வாகத்தை அணுகி அவருக்கு உரிய சிகிச்சை அளியுங்கள் என்று சொல்ல முடியாத நிலையில் உள்ளேன். ஏனெனில் மக்கள் பிரதிநிதி அலுவலகங்கள் செயல்பட முடியாத வகையில் உள்ளது. ஒன்றரை மாதம் மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தேர்தல் ஆணையத்தால் தண்டனைதான்” என்று குற்றம் சாட்டினார்.