அமைச்சர் மா.சுப்பிரமணியன் pt web
தமிழ்நாடு

“சட்டப்படி குற்றம்.. கண்டிக்கக்கூடிய விஷயம்” இர்ஃபான் விவகாரத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன்

“இர்ஃபான் அவரது குழந்தைக்கு தொப்புள் கொடியை அறுத்த விஷயம் மிகப்பெரிய கண்டிக்கக்கூடிய விஷயம்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Angeshwar G

சர்ச்சையில் இர்ஃபான்

இந்த உலகத்திற்கு புதிதாக வந்துள்ள தன் குழந்தையைக் காண, மருத்துவமனை அறுவை சிகிச்சை அறையின் வெளியே கண்கள் பூத்துக் காத்திருக்கும் தந்தைகள் ஏராளம். அறுவை சிகிச்சை அறையில் பிரசவிக்க இருக்கும் மனைவிக்கு ஆதரவாகவும், நம்பிக்கையூட்டவும் கணவரையும் உடனிருக்கச் சொல்வார்கள் மருத்துவர்கள். ஆனால், தனது மனைவியின் பிரசவத்தின்போது யாரும் நினைத்துப்பார்க்க முடியாத செயலை செய்துள்ளார் யூ-டியூபர் இர்ஃபான்.

தனியார் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினரே கத்தரிக்கோலை நீட்ட, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுகிறார் இர்ஃபான். மருத்துவர் அல்லாத நபர் தொப்புள் கொடியை வெட்டுவது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின் படி தவறு. இதுதொடர்பாக மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார் மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநர் ராஜமூர்த்தி.

அனைத்தும் வீடியோவாக பதிவு

ஏற்கெனவே, கருவில் இருக்கும் தனது குழந்தையின் பாலினத்தை துபாயில் ஸ்கேன் செய்து தெரிந்துகொண்ட இர்ஃபான், அதனை அறிவித்து சர்ச்சையில் சிக்கியிருந்தார். அப்போது மன்னிப்பு கேட்டு, பாலினம் அறிவிப்பு தொடர்பான வீடியோவை அவர் நீக்கியதால் நடவடிக்கையில் இருந்து தப்பினார்.

கடந்த ஜூலை மாதத்தில் இர்ஃபானுக்கு குழந்தை பிறந்த நிலையில், தன் கர்ப்பிணி மனைவி பிரசவ நேரத்தில் வீட்டிலிருந்து மருத்துவமனை செல்வது முதல் குழந்தையை பெற்றெடுத்தது வரை வீடியோ பதிவு செய்திருக்கிறார் அவர். அதிலும் அறுவை சிகிச்சை அரங்கத்திற்கே கேமராவை கொண்டுசென்று, தனிப்பட்ட உன்னதமான தருணம் எனக்கூறி அதை படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பது தவறான முன்னுதாரணம் என பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

கண்டிக்கக்கூடிய விஷயம் 

பல்வேறு தரப்புகளில் இருந்தும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. சமூகத்தில் யார் செய்தாலும் இது குற்றம்தான். ஆனால், அத்தனை பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள ஒருவர், இத்தகைய ஒரு வீடியோவை வெளியிட்டால், அதுபோல தானும் செய்து உன்னதமான தருணத்தைப் படம்பிடித்துக் கொள்கிறேன் என தனிநபர்களும் இறங்கினால் அந்த விளைவு எங்குபோய் நிறுத்தும் என்பதை நினைத்துப் பார்த்தாலே பதற்றம் ஆகிறது.

இந்நிலையில்தான் இர்ஃபான் மீது கடுமையான எதிர்வினையை ஆற்றியுள்ளார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அவரது குழந்தைக்கு அவரே தொப்புள் கொடியை அறுத்து எடுத்துள்ளார். இது மிகப்பெரிய அளவில் கண்டிக்கக்கூடிய விஷயம். மருத்துவமனையில் அறுவை அரங்குக்குள், மருத்துவர் அல்லாத ஒருவர் சென்று தொப்புள் கொடியை துண்டித்து இருப்பது என்பது சட்டப்படி குற்றம். விதிகளை மீறிய நபர் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் செம்மஞ்சேரி பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்மீது மட்டுமல்லாமல், அவரை அரங்கிற்குள் அனுமதித்து அச்செயலில் ஈடுபட கோரிய தனியார் மருத்துவமனையின் பெண் மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்கச்சொல்லி புகார் தரப்பட்டுள்ளது. மிகவிரைவில் இந்த நடவடிக்கைகள் சட்ட ரீதியாகவும் துறைரீதியாகவும் எடுக்கப்படும். தவறு செய்தவர்களை இந்த அரசு நிச்சயம் காப்பாற்ற முயலாது” என தெரிவித்தார்.