சென்னை அண்ணா நகரில் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவினர் கண்டன முழக்கமிட்டனர். அமைச்சர் பாண்டியராஜனின் சொந்த தொகுதியான, ஆவடியிலுள்ள மாநகராட்சி அலுவலகம் அருகே போராட்டம் நடத்தவும் திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக நிர்வாகிகள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தியதை அடுத்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், ''அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே'' என்று பாரதியாரின் வரிகளை குறிப்பிட்டுள்ளார். அதே போல், யாருக்கும் அடிமையில்லை, எமனுக்கும் அஞ்சமாட்டோம் என்ற பொருளில் திருநாவுக்கரசர் எழுதியுள்ள ''நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்'' என்ற வரிகளையும் அமைச்சர் பாண்டியராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் முதல் முறையாக வீட்டுக்கு எதிரில் தன் உருவத்திற்கு பாடை கட்டி இழுத்து தீக்கிரையாக்கியதைக் கண்டதாகவும், இனம்புரியாத தெளிவு எனவும் ஹேஷ் டேக் செய்து அமைச்சர் பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.