தமிழ்நாடு

அரசுக்கு சம்பந்தம் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு

அரசுக்கு சம்பந்தம் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு

webteam

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெறும் பிரச்னைக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக தகவல் மற்றும் விளம்பரம் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட ‌தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கும், அவரது எதிர் தரப்பினருக்கும் இடை‌‌யிலான மோதல் முற்றியுள்ள‌‌து. தயாரிப்பாளர் சங்கத்தில் 7 கோடி ரூபாய் வைப்புநிதி கையாடல் செய்யப்பட்டிருக்கிறது என்று அச்சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமல் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.  

இது தொடர்பாக அச்சங்கத்தில் உள்ள ஏ.எல்.அழகப்பன், T.சிவா, ஜே.கே. ரித்தீஷ், எஸ்.வி. சேகர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டனர். இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் மாற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று வருகை தந்தனர். ஆனால், போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், விஷால் தரப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனையடுத்து நடிகர் விஷாலும், அவரின் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக  தமிழக தகவல் மற்றும் விளம்பரம் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்த போது, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெறும் பிரச்னைக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பூட்டு போட்டவர்கள் முதல்வரை தலைமை செயலகத்தில் இன்று சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.