பாஜக தனித்து போட்டியிட்டு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வென்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது தொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்தார்.
கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை மற்றும் வானரமுட்டியில் தமிழக அரசின் பொங்கல் பரிசினை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், தர்பார் படத்தில் உள்நாட்டு இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல், வெளிநாட்டுக் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர், “திரைப்படத்தில் எந்தக் கலைஞரை பயன்படுத்த வேண்டும் என்பது அது தயாரிப்பாளர்களின் முடிவு. திரைப்படம் வெளிவரும் போது சொல்வதைவிட, தயாரிக்கும்போது சொல்லி இருக்க வேண்டும். இதில் அரசு தலையிட முடியாது. இந்த விவகாரத்தில் தலையீடுவது தயாரிப்பாளர்களின் உரிமையை பறிப்பதாகும். தற்போது இதுகுறித்து பேசுவது படத்திற்கு விளம்பரத்தை தேடுவதற்காக இருக்கும்” என்றார்.
இதைத்தொடர்ந்து தர்பார் படத்திற்கு சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த கடம்பூர் ராஜூ, “தர்பார் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கேட்கப்படவில்லை. திரைப்படம் 9ஆம் தேதி தான் வெளியாக உள்ளது. முறைப்படி யார் அணுகினாலும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. நடிகர் விஜய், அஜித், ரஜினியின் படங்களின் சிறப்புக் காட்சிக்கு இதுவரை அனுமதி கொடுத்து இருக்கிறோம். எனவே தயாரிப்பாளர்கள் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வேண்டும் என்று அரசை அணுகினால், முதல்வரின் ஆலோசனைப்படி பரிசீலிக்கப்படும்” என்றார்.
பின்னர் பாஜக தனித்து நின்று ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை பெற்று இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, “பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்தை பற்றி கூறி இருக்கலாம்” என அமைச்சர் தெரிவித்தார்.