தமிழ்நாடு

"கணினி கண்காணிப்பு மருத்துவர் கையில் இருக்கும் கத்திபோல் பயன்பட வேண்டும்" - அமைச்சர் ஜெயக்குமார்

"கணினி கண்காணிப்பு மருத்துவர் கையில் இருக்கும் கத்திபோல் பயன்பட வேண்டும்" - அமைச்சர் ஜெயக்குமார்

webteam

நாட்டு மக்களின் கணினியை கண்காணிக்க மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதி மருத்துவர் கையில் இருக்கும் கத்திபோல் பயன்பட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளில் பாதுகாத்து வைத்திருக்கும் தகவல்கள் மற்றும் பரிமாறப்படும் தகவல்களைக் கண்காணிப்பது, அந்தத் தகவல்களை இடைமறித்து ஆய்வு செய்வது, தடை செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள மத்திய அரசின் 10 விசாரணை முகமைகளுக்கு உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்துள்ளது. 

அதன்படி உளவுத்துறை, போதை மருந்து கடத்தல் தடுப்புப் பிரிவு, அமலாக்கப்பிரிவு, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு, சி.பி.ஐ., தேசிய புலனாய்வு அமைப்பு, டெல்லி போலீஸ் ‌ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட 10 விசாரணை முகமைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு தராதவர்கள் குற்றவாளியாக கருதப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நாட்டு மக்களின் கணினியை கண்காணிக்க மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதி மருத்துவர் கையில் இருக்கும் கத்திபோல் பயன்பட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ''ரா, சிபிஐ உள்ளிட்ட பத்து அமைப்புகளுக்கு நாட்டு மக்களின் கணினியை கண்காணிக்க அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசின் நோக்கம் நல்லதாக இருக்கலாம். தொழில்நுட்பம் மூலம் தீவிரவாதம் பெரிதும் வளர்ந்துவிட்டது. தீவிரவாதத்தை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியாது. மத்திய அரசின் இந்த கண்காணிப்பு, மருத்துவர் கையிலுள்ள கத்தி போல் இருக்க வேண்டும். கொலைகாரன் கையில் இருக்கும் கத்தி போல் மாறவிடக்கூடாது'' என்று தெரிவித்தார்.