தெற்கு குவைத்தின் மன்காஃப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள், 6 மாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியுள்ளனர். அதனைக் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரான கே.ஜி. ஆபிரஹாம் என்பவர் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்திருக்கிறார். அந்தக் குடியிருப்பில், கேரளா, தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் தங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில்தான், செவ்வாய்க் கிழமை அதிகாலை 6 மணிக்கு, தரைத் தளத்தில் இருந்த சமையலறையில், திடீரென தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. கரும்புகையுடன் மளமளவென பரவிய தீயில், உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கினர்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 195 பேரில், 175 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நிலையில், பயங்கர தீ விபத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலனோர் கேரளாவைச் சேரந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. விபத்தில், படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில தொழிலாளர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், உறவினர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில்தான், குவைத்தில் விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்தாக தெரியவந்துள்ளது. தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
குவைத் தீ விபத்து தொடர்பாக புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “விபத்தில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் 5 இறந்திருக்க கூடும் என்ற செய்தி அங்கிருக்கும் தமிழ்ச்சங்கங்கள் மூலமாக அறிந்துகொண்டோம். இதுவரை தூதரகத்தின் மூலமாக அதிகாரப்பூர்வமான செய்தி எதுவும் பதிவாகவில்லை. ஐந்து பேரின் பெயர்களாக ராமு கருப்பண்ணன், வீராசாமி மாரியப்பன், சின்னத்துரை கிருஷ்ணமூர்த்தி, முகமது ஷெரிப், ரிச்சர்டு ராய் என்றும் தெரிவித்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக தூதரகத்தின் வாயிலாக செய்தி வராத நிலையில், நாங்களும் செய்தி வெளியிடுவதில் தயக்கத்தோடு இருக்கின்றோம். செய்திகள் கிடைத்ததும் தமிழக அரசு உடனுக்குடனான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும்” என தெரிவித்தார்.