அமைச்சர் கீதா ஜீவன் PT
தமிழ்நாடு

"1000 ரூபாய் பணம் இவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் " - அமைச்சர் கீதா ஜீவன் கூறிய புதிய தகவல்!

மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் குறிப்பிட்ட மக்களுக்குத்தான் கிடைக்கும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

webteam

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையேற்று நடத்திவைத்தார்.

இந்நிகழ்வில் திருச்சி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

இவர்களுக்கு எல்லாம் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது! - அமைச்சர் கீதா ஜீவன்

நிகழ்வில் பங்கேற்பதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இ சேவை மையங்களில் மேல்முறையீடு தொடங்கிய முதலிரண்டு நாட்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. தற்போது இணையச் சேவை பிரச்னை சரி செய்யப்பட்டு மகளிர் உரிமத்தொகை தொடர்பான பணிகள் தொய்வின்றி நடைபெறுகிறது.

அமைச்சர் கீதா ஜீவன்

இ சேவை மையங்கள் மூலம் நடைபெறும் சிறப்பு முகாம்களே போதுமானது. மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீட்டுக்கு இ சேவை மையங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருமானம் அதிகம் இல்லாதவர்கள் கூடுதல் வருமானம் எனக் குறுஞ்செய்தி வந்தால், அவர்கள் தாராளமாக மேல்முறையீடு செய்யலாம். அவர்களுக்குப் பரிசீலனை செய்யப்பட்டு உரிமை தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும். ஆண்டு வருமானம் அதிகமாக உள்ளவர்கள், முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை பெறுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில்லை.

மகளிர் உரிமைத் தொகை

ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் இணைப்பில் உள்ள தவறு காரணமாகச் சிலருக்கு மாற்று வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனையும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். வங்கிக் கணக்கு மாறுதலாகச் சிலருக்குப் பணம் வரவு வைக்கப்பட்டதையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 30 நாட்களில் மக்கள் மேல்முறையீடு செய்யலாம்” என்றார்.

அனைத்து மகளிருக்கும் 1000 வழங்க வேண்டியதில்லை!

தொடர்ந்து அவரிடம் ‘தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப் போல் அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் வழங்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது’ தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “தேவை உள்ளோருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மாதம் ஒரு லட்சம், 2 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு இந்த தொகை ஒரு பொருட்டே இல்லை. தேவையானவர்களுக்கு மட்டும் இத்தொகை வழங்கப்படுகிறது. அதிக வருமானம் பெறுபவர்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் என்பது பெரிதாக இருக்காது. அதனால் தகுதி வாய்ந்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

அமைச்சர் கீதா ஜீவன்

மிகப்பெரிய திட்டம் என்பதால் தொடக்கக் காலத்தில் ஒரு சில குளறுபடிகள் ஏற்படுவது வழக்கம்தான், எனினும் அவற்றையும் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்று பேசியுள்ளார்.