தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் 11 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சமீபத்தில் இந்த பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் குழந்தைகளுக்கு அதே ஊரில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த முனிய செல்வி என்பவர் சமையல் செய்து கொடுத்துள்ளார். இதற்கு அங்கு பயிலும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வேண்டாமென புறக்கணித்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்காக இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன்கிறிஸ்டி பாய் தலைமையிலான வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித் துறை, மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று மறுத்து விட்டனர். இதையடுத்து இரண்டு குழந்தைகள் மட்டும் உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த செய்திகள் வெளியான நிலையில், தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் பள்ளிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அமைச்சர் கீதா ஜீவன் பள்ளி குழந்தைகள், தலைமையாசிரியர் மற்றும் காலை உணவு திட்ட சமையலர் ஆகியோருடன் தனித்தனியாக விசாரணை நடத்தியதோடு காலை உணவு திட்டத்தில் தயாரிக்கப்பட்ட உணவின் தரத்தினையும் ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “ஊரில் உள்ளவர்களுக்கும், காலை உணவு திட்டத்தில் சமையல் செய்பவருக்கும் தனிப்பட்ட பிரச்னை உள்ளது. இதன் காரணமாக பெற்றோர்கள் குழந்தைகளை சாப்பிட அனுமதிக்க மறுத்து வருகின்றனர். குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை. இந்த பிரச்னை விரைவில் சரி செய்யப்படும்” என்றார்.
பள்ளி குழந்தைகளின் பெற்றோர் தரப்பில் கேட்டபோது, “எங்கள் குழந்தைகளுக்கு காலை உணவு வேண்டாம். மற்றபடி சாதி அடிப்படையில் இதை நாங்கள் பார்க்கவில்லை. அவ்வளவுதான்” என்று கூறினர். பேசுவதற்கும், பேட்டி கொடுப்பதற்கும் மறுத்து விட்டனர்.