ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அருள் - பரிமளா தம்பதியின் இரண்டாவது மகனான 13 வயதான ராகவேந்திரா, கடந்த 18ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதனால், பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்தார்.
இந்த தீராத சோகத்திலும், ராகவேந்திராவின் பெற்றோர் தாமாகவே முன்வந்து ராகவேந்திராவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர்.
தொடர்ந்து, ராகவேந்திராவின் உடல் இன்று நல்லடக்கம் செய்வதற்காக சர்வந்தாங்கள் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரசு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சர் ஆர். காந்தி, மாவட்ட ஆட்சியர் வளர்மதி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் உடல் உறுப்பு தானம் செய்த ராகவேந்திராவின் பெற்றோர்களிடம் அமைச்சர் ஆர். காந்தி ஆறுதல் தெரிவித்ததோடு, இருகரம் கூப்பி தலை வணங்கி கண்ணீர் விட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மகன் செத்தாலும் அவனால் மற்றவர்கள் நன்றாக இருப்பார்கள் என்றுதான் உடல் உறுப்பு தானம் செய்தோம் என்று கண்ணீருடன் பெற்றோர் தெரிவிக்க, சட்டென காலில் விழ முயன்றார் அமைச்சர் காந்தி.. காலை தொட்டு கும்புடுறேன் அம்மா.. என்றும் கண்ணீர் மல்க பேசினார். அமைச்சரின் இந்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.