சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கரின் உருவப்படத்திற்கு திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மாலை அணிவித்து மலர்தூவி இன்று மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவில் உள்ள பெரும் தலைவர்களின் சொத்துப் பட்டியல் வெளியிட்டது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “அதையெல்லாம் நான் பார்க்கவில்லை; எனக்கு அது தெரியாது. இது எல்லாம் அரசியலில் அவர்கள் செய்யும் ஒரு ஸ்டண்ட் அவ்வளவுதான்” என்றார்.
திமுக-வினரின் ஆவணங்கள், சொத்துவிவரங்கள் என அண்ணாமலை வெளியிட்டவற்றை இங்கே அறிக...
பின்னர் காவிரி குண்டாறு இணைப்பு குறித்து கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “பெயருக்கு தான் அவர்கள் காவேரி குண்டாறு இணைப்பு என அப்போது வைத்துள்ளார்கள். நாங்கள் தான் அதை செய்து வருகிறோம். தற்போது இரண்டு ரீச் செய்து முடித்துள்ளோம். இதற்கு வெளிநாட்டில் நிதி வாங்கி பணிகளை செய்து வருகிறோம். அதேபோல தற்போது கால்வாய் வெட்டி வருகிறோம். அடுத்த கட்டமாக 2 ரீச் பணிகள் நடைபெற உள்ளது. சுமார் 1000 கோடி நிதி ஒதுக்கீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. நிச்சயம் காவிரி குண்டாறு இணைப்பு செயல்படுத்தப்படும்” என தெரிவித்தார்.