செய்தியாளர்: ஆண்டோ எம் தாம்சன்.
“திமுக-வில் எல்லோரும் ஓல்ட் ஸ்டூடெண்ட்டா இருக்காங்க. எல்லாருமே ரேங்க் வாங்கி இருக்குறவங்க. அதுலயும் துரைமுருகன்னு ஒருத்தர் இருக்கார். அவர் கலைஞர் கண்ணுலையே விரலை விட்டு ஆட்டுனவர்”
- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய வார்த்தைகள்தான் இது.
சீனியர் - ஜூனியர் அமைச்சர்கள் தொடர்பான ரஜினியின் பேச்சு திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தவே, அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பது போல, “திமுகவில் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இப்படி விவகாரம் டிரெண்ட் ஆகிய நிலையில், ரஜினியின் பேச்சுக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன், "பல்லு போன நடிகர்கள் இன்னும் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை" என விமர்சித்திருந்தார்.
இந்த விவகாரம் தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பரவிய நிலையில் அமைச்சர் துரைமுருகன் கூறியதில் வருத்தமில்லை எனவும், அவர் உடனான நட்பு தொடரும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்திருந்தார். அதேசமயம், தங்களின் நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம் எனவும், “நாங்கள் எப்போதும்போல் நண்பர்களாகவே இருப்போம்” என்றும் அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்திருந்தார்.
ரஜினி, துரைமுருகன் விவகாரம் குறித்த கேள்விக்கு, “அவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். துரைமுருகன் கூறியது போல இதனை பகைச்சுவையாக்க வேண்டாம்” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார்.
இந்த நிலையில்தான், அமைச்சர் துரைமுருகன் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற வகையில் பேசியுள்ளார்.
வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், “இன்று பல இளைஞர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அதை நான் வரவேற்கிறேன். ஏனென்றால் நாங்கள் எல்லாம் இளைஞர்களாகதான் வந்தோம்.
‘நாற்றங்காலில் இருக்கிற பயிரை பிடுங்கி சேற்றில் நட்டால்தான் பலன் கொடுக்கும். நாற்றங்காலாகவே விட்டுவிட்டால் பாழாகிவிடும். ஆகவே தகுந்த நேரத்தில் உங்களை கட்சியில் சேர்த்து பார்த்துக் கொள்கிறேன்’என்றுள்ளார் பேரறிஞர் அண்ணா
ஆக, இளைஞர்கள் வரவேண்டும். இளைஞர்கள் இல்லாமல் இருந்தால், கட்சியே போய்விடும். ஆகவே இளைஞர்களுக்கு அனைவரும் வழி விடுங்கள். அதேநேரம், வருகிற இளைஞர்கள் கொஞ்சம் தடம் பார்த்து வாருங்கள். கட்சியை நினைத்து வாருங்கள். வந்த உடனேயே என்ன கிடைக்கும் என எதிர்பார்க்காதீர்கள்.
உங்களை விட உழைத்தவர்கள், அடிபட்டவர்கள், உதைப்பட்டவர்கள், கட்சியினால் பொண்டாட்டி பிள்ளைகளிடம் கெட்ட பேர் வாங்கியவர்கள் என நிறைய பேர் இங்கு உள்ளனர். அவர்களும் இந்த கட்சியிலே தியாகம் செய்திருக்கிறார்கள். இந்த நிலைமையை எல்லாம் நாம் நினைத்தால்தான் ஒரு இயக்கத்தை நிலைத்து நிற்க வைக்க முடியும். மிசாவில் எல்லோரும் நமது கட்சியை போய்விடும் என சிலர் நினைத்தார்கள். ஆனால் வெளியே வந்த பிறகு என்ன நடந்ததென பார்த்தீர்களா? நம்முடைய தலைவர் அதைவிட அதிகமாக இன்று உழைக்கிறார். இதையெல்லாம் உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இளைஞர்கள் தொடர்பான பேச்சு திமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய அமைச்சர் துரைமுருகன், மீண்டும் அதே பாணியில் பேசியது எதை உணர்த்துகிறது என கேள்வி எழுப்பியுள்ளனர், திமுக மூத்த நிர்வாகிகள்.