அரசியலுக்காக போராட்டத்தை நடத்தி ‘வான்டெட்’ஆக சிறைக்குச் செல்பவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘‘ ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது 7 ஹைட்ரோகார்பன் திட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். எனவே ஹைட்ரோகார்பன் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது என்று கொள்கை முடிவை எடுக்க வேண்டும். இந்தப் பேரவையிலேயே தமிழக அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே இப்பிரச்சனை குறித்து பேரவையில் கேள்வி எழுப்பியபோது ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது எனத் தொழில்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்கள் பதில் அளித்துள்ளார்கள். ஆனால் இப்போது மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் இவ்வாறு பதில் அளித்திருப்பதன் மூலம், ஹைட்ரோகார்பன் திட்டம் தமிழகத்தில் வரும் எனத் தெரிகிறது. இதனை உடனடியாக தடுத்து கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.” என தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், “மத்திய அரசு திட்டமிட்டிருந்தாலும், மாநில அரசின் அனுமதி என்பது தேவை. ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் தொடங்க விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அதனை ஆராய்ந்து தான் பரிசீலிக்கப்படும். மாநில அரசின் அனுமதியை பெறாமல் மாநிலத்தின் நிலப்பரப்பில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. திட்டமிட்டு போராட்டத்தை நடத்தி விவசாயிகளைத் தூண்டி விடுகின்றனர். அரசியலுக்காக போராட்டத்தை நடத்தி Wanted ஆக சிறைக்கு செல்பவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம்.” என்றார்.
அப்போது மு.க.ஸ்டாலின், “ மத்திய அமைச்சர் தெரிவித்ததை தான் சொல்கிறேன். விவசாயிகள் வாழ்வாதார போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்” என்றார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், “ நாங்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தவில்லை. அரசியலுக்காக செய்யும் போராட்டத்தை விமர்சிக்கிறோம். மாநில அரசின் அனுமதி இன்றி மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்த முனைந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது” என்றார்.