திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் - தஞ்சை திருக்காட்டுப்பள்ளி இடையே, கல்லணை கொள்ளிடம் புதிய ஆற்று பாலம் வழியாக செல்லும் வகையிலான பேருந்து சேவையினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.
வரலாற்றில் முதல் முறையாக இந்த தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதால், திருச்சி- தஞ்சை இடையே வேளாண் வர்த்தகமும், கிராம பகுதி மக்களின் வேலை வாய்ப்புகளும் மேம்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி - தஞ்சை இடையிலான கல்லணை கதவணை பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. இதனால் அணையின் இரு புறமும் பேருந்துகளில் வந்திறங்கும் பயணிகள், கல்லணை பாலத்தை நடந்து கடக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது கொள்ளிடம் புதிய பாலத்தின் வழியாக பேருந்து இயக்கப்படுவதால், ஒரே பேருந்தில் திருச்சி - தஞ்சை மாவட்டங்களுக்கு, கல்லணை வழியாக சென்று வருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் திருவானைக்காவல், கல்லணை, கோவிலடி, பூண்டி, திருக்காட்டுப்பள்ளி இடையே தினசரி 8 முறை 2 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. அதேபோல திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தொண்டராயன்பாடி கிராமத்திற்கும், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து அகரப்பேட்டை, பாதரக்குடி வழியாக கல்லணைக்கும் 2 பேருந்துகளின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு புதிய வழித்தடத்திற்கான பேருந்து, இரண்டு வழித்தடங்களுக்கான பேருந்து சேவை நீட்டிப்பு ஆகியவற்றை தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், கல்லணையில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதற்கான தொடக்க விழாவில் சட்டமன்ற திருவையாறு தொகுதி உறுப்பினர் துறை சந்திரசேகரன், தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.