பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளையும் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னைக்கு நாளை (அக்டோபர் 16) ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில், மழையில் இருந்து மக்களை காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை அவசர சேவைக்கு, கட்டுப்பாடு அறை எண் 1913, பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையேதான் நேற்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் விடுமுறை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள குழந்தைகளுக்கு, 'ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது ’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து, தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.