தமிழ்நாடு

எந்த கொம்பனாக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்: ஸ்ரீமதி தாயாரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

எந்த கொம்பனாக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்: ஸ்ரீமதி தாயாரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

webteam

மாணவி ஸ்ரீமதியின் தாயாரை அவரது இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சந்தித்து ஆறுதல் கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து  மாணவியின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதற்கிடையே, மாணவி ஸ்ரீமதியின் தாயாரை அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, மாணவியின் தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின் போது பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ''மாணவி ஸ்ரீமதி மரணத்திற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், எந்த கொம்பனாக இருந்தாலும் கண்டிப்பாக  தண்டிக்கப்படுவார்கள். அதுதான் மாணவிக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்; மாணவியின் பெற்றோர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொண்டேன்.மாணவியின் தாயாரிடம் அலைபேசி வாயிலாகப் பேசிய முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ஆறுதலைத் தெரிவித்து ‘தவறு செய்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். உங்களுக்கு உகந்த நேரத்தில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம். தைரியமாக இருங்கள்...’'' என்றார்.

இதையும் படிக்க: பள்ளி மாணவி மரண விவகாரம்: டிசி பெற்று சொந்த ஊருக்குச் சென்ற 23 மாணவிகள்