மின்சார உபயோகம் pt web
தமிழ்நாடு

தமிழகத்தில் அதிரடியாக குறைந்த மின் தேவை.. இப்படி மழை பெய்ஞ்சா இருக்காதா பின்ன!!

PT WEB

தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளிலும் நாள் முழுவதும் பயன்படுத்தும் மின்சாரம், மின் நுகர்வு எனப்படுகிறது. தமிழகத்தின் சராசரி மின்நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது.

கோடை வெயில்

தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து, மின்நுகர்வும் உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு 40 கோடி யூனிட்டை தாண்டி பதிவாகி வருகிறது. இதற்கேற்ப தமிழகத்தின் மின்தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி, கடந்த மார்ச் 20-ம் தேதி இதுவரை இல்லாத அளவாக 19,387 மெகாவாட்டாக மின்தேவை அதிகரித்தது. அன்றைய தினம் 42.37 கோடி யூனிட்டாக மின் பயன்பாடு இருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2 மாத காலமாக தொடர்ச்சியாக மின்தேவையும், மின் நுகர்வும் தொடர்ச்சியாக அதிகரித்து புது புது உச்சத்தை அடைந்தது. இறுதியாக கடந்த 2-ம் தேதி 20,830 மெகாவாட் மின்தேவை என்பதே அதிகபட்ச அளவாக இருந்தது.

மழை

தற்போது கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருவதால் மின்தேவை குறைந்துள்ளது. அதன்படி, நேற்று முன் தினம் 17,331 மெகாவாட் என்பதே மின்தேவையாக இருந்தது. அதேநேரம், 39 கோடி யூனிட் என்பது மின் பயன்பாடாக இருந்தது. இவ்வாறு சுமார் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தின் தேவையும், 1 கோடி யூனிட் மின் பயன்பாடும் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.