பிரதீப் ஜான் pt web
தமிழ்நாடு

அடுத்த சில மணி நேரம் மழை எப்படி இருக்கும்?.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கியமான தகவல்!

“இன்று இரவு வரை 100 - 150 மிமி மழை பெய்ய வாய்ப்புள்ளது. மொத்தத்தில் 400 முதல் 450 மிமீ வரை மழை பெய்யவாய்ப்பு இருக்கிறது” என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Angeshwar G

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் விடிய விடிய கனமழை பெய்தது. 15, 16 மணி நேரத்திற்கும் மேலாக மழை தொடரும் நிலையில் அண்ணாநகரில் 18.3 செமீ மழையும் கோடம்பாக்கத்தில் 18.2 செமீ மழையும் பதிவாகியுள்ளது. அடையாறு சுற்றுவட்டார பகுதிகளில் 17.4 செமீ மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 20 செமீ மழையும், வளசரவாக்கத்தில் 19 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக சில தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், “புயல் சென்னையில் இருந்து 50 முதல் 70 கிலோ மீட்டருக்கு அருகே அதன் மையப்பகுதி வந்துவிட்டது. மேற்குப்பகுதியில் உள்ள அடர்ந்த மேகங்கள் சென்னையில் விழும் போது அது பெருமழையாக மாற வாய்ப்பிருக்கிறது. அது நேற்றிரவில் இருந்து இன்று மதியம் வரை சென்னையில் விழுந்துவருகிறது. சென்னை மட்டுமல்லாமல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என நான்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “அடர்ந்த மேகங்களாக இருப்பதால் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் 200 மிமி முதல் 300 மிமி மழை பதிவாகியுள்ளது. உயர்ந்த பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளிலும் ஒரே அளவில் மழை இருக்கிறது.

நேற்று காலை 8 மணி வரை 60 முதல் 70 மிமி மழை இருந்தது. இன்று 230 மிமி முதல் 280 மிமி வரை பதிவாகி இருப்பதை பார்த்தோம். இன்று காலை 8.30 மணிக்குப் பிறகே 70 மிமி மழை பெய்துள்ளது. இன்று இரவு வரை 100 முதல் 150 மிமி வரை பெய்ய வாய்ப்புள்ளது. மொத்தத்தில் 400 முதல் 450 மிமீ வரை மழை பெய்யவாய்ப்பு இருக்கிறது.

சென்னை மழை

சென்னையைப் பொறுத்தவரை இன்று இரவு வரை மழை இருக்க வாய்ப்புள்ளது. சற்றே மெதுவாக கரையைக் கடந்தால் நாளை அதிகாலை வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.