தமிழ்நாடு

சிலைக் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

சிலைக் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Rasus

சிலைக் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வழக்கு உயர்நீதிமன்றதில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜராகவும், சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம் அமைப்பது குறித்த அட்டவணையை தாக்கல் செய்வதற்கும் அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை வரை அவகாசம் கேட்டதை அடுத்து, வழக்கை ஜூலை 13-ஆம் தேதிக்கு நீதிபதி மகாதேவன் ஒத்திவைத்தார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது சிலைக் கடத்தல் தொடர்வதாகவும், ஸ்ரீரங்கம் கோயில் சிலைகள் காணாமல் போகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தனக்கு புகார்கள் வருவதாகவும், அண்ணாமலையார் கோயிலில் பஞ்சலோக சிலை திருடப்பட்டதாக செய்திகள் வந்ததாகவும் தெரிவித்தார். சிலைக் கடத்தல் தொடர்வது நிர்வாகத் திறமை இல்லாததை காட்டுவதாக குற்றம் சாட்டிய நீதிபதி, முறையான தடுப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடப்படும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.