தமிழ்நாடு

விதிமுறைகளின்படி விளம்பர பேனர்கள் வைக்கலாம் - சென்னை மாநகராட்சி 

webteam

உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை விலக்கிக் கொண்டதால் விதிகளுக்கு உட்பட்டு சென்னையில் விளம்பர பதாகைகள் மற்றும் தட்டிகளை அமைக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் சாலைகளில் விளம்பர பதாகைகளை வைக்க கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற ஆணையையும் மீறி விளம்பர பதாகைகளை வைப்பவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு வந்தது. 

இந்நிலையில் விளம்பர பதாகைகள் மற்றும் தட்டிகளை வைக்க பிறப்பித்திருந்த இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தகர்த்துள்ளது. இதனையடுத்து சென்னை மாநகரில் இந்த விளம்பர பதாகைகளை வைக்க சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சில விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி விளம்பர பதாகைகள், தட்டிகளை அமைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைக்காத பட்சத்தில் நடைபாதையின் குறுக்கே பதாகைகளை அமைக்கக்கூடாது. இருபுற சாலைக்கு நடுவே பதாகைகளை வைக்கக்கூடாது.

இரு விளம்பரத் தட்டிகளுக்கு இடையே குறைந்தது 10 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பதாகையின் கீழ் அதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நாள், அனுமதி எண் இடம்பெற வேண்டும். கால அவகாசம் முடிவுற்ற உடன் மக்களுக்கு இடையூறு இன்றி பதாகைகளை அகற்ற வேண்டும். விதிகளை மீறினால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே அச்சகங்கள் பதாகைகளை அச்சடித்து தர வேண்டும். அத்துடன் அனுமதிக்கப்பட்ட அளவில் பதாகைகளை அச்சடித்துக் கொடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பதாகை அச்சடிக்க பயன்படுத்தக்கூடாது. அனுமதி எண் இல்லாமல் பதாகைகளை அச்சடித்து தரக்கூடாது போன்ற கட்டுபாடுகளை சென்னை மாநகராட்சி விதித்துள்ளது.