தமிழ்நாடு

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற வெளிமாநில மாணவர்களுக்கு நோட்டீஸ்

webteam

மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்ற 126 வெளிமாநிலத்தவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அளித்துள்ளது. 

மதுரையை சேர்ந்த சோம்நாத்,  நேயா,  ஸ்ரீலயா உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதில்,"தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.  இதில் 85 சதவீதம் இடங்கள், மாநில மாணவர்களுக்கும்,  15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 126 வெளிமாநில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். எனவே,தமிழக மருத்துவக் கல்வி இயக்குநகரத்தின் செயலர்  2019- 2020 ஆம்  ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க வேண்டும் .

மேலும் தமிழக இளங்கலை  மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்கவும்,   தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில்  மருத்துவக் கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக்  கூறியிருந்தனர்.

இந்த மனுவை  இன்று விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் , கலந்தாய்வில் பங்கேற்ற வெளிமாநில மாணவர்கள் என கூறப்படும் 126 மாணவர்களை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்தும், எதன் அடிப்படையில்  கலந்தாய்வில் கலந்துகொண்டனர் என்பது குறித்தும்  அவர்களின் இருப்பிட சான்று குறித்தும்  பதிலளிக்கவும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 26 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.