தமிழ்நாடு

நீதிமன்றங்களில் காணொளி காட்சி வசதி ! தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்

நீதிமன்றங்களில் காணொளி காட்சி வசதி ! தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்

webteam


தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் காணொளி காட்சி வசதியையும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மின்னணு அறிவிப்பு பலகையையும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹிலரமானி தொடங்கி வைத்தார். 

வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து நீதிமன்றங்களிலும் வீடியோ காண்பரன்சிங் வசதியை நடைமுறைபடுத்துவது குறித்து பரீசிலுக்குமாறு அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. அதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொளி காட்சிக்கான வரைவு விதி 2018 தயாரிக்கப்பட்டு,அது ஜனவரி 1ஆம் தேதி முதல் அது அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் காணொளி காட்சி தொடங்கி வைக்கும் வசதியையும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மின்னணு அறிவிப்பு பலகையையும் தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார். உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹிலரமானி “நீதிமன்றங்கள் தான் சாமானிய மக்களின் உச்சபட்ச நம்பிக்கை அதனால் தரமான சேவையை தர ஈடுபாட்டுடன் பணியாற்றுவது அவசியம். தமிழகம் முழுதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் காணொளி காட்சி வசதி ஏற்படுத்த பட்டதன் மூலம்,  இனி மாவட்ட நீதிபதிகள் சம்மந்தபட்ட நீதிமன்றத்தில் இருந்தவாறே கூட்டங்களில் பங்கேற்க முடியும்.காணொளி வசதிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போய் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிறையில் உள்ள கைதிகளின் நீதிமன்ற காவலை நீட்டிப்பது தொடங்கி, சாட்சிகளின் விசாரணை போன்றவற்றிற்கு இனி தேவையின்றி அலைய வேண்டியதில்லை” என்றார். 

மேலும் “ இதன் மூலம் நேரமும், பணமும் விரயமாவது பெருமளவில் தவிர்க்கப்படும். இனி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றால், அந்தந்த மாவட்ட தலைமை நீதிமன்றத்திற்கு சென்று காணொளி மூலம் ஆஜராகலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் கூடிய விரைவில் காணொளி காட்சி வசதி கொண்டுவரப்படும். வீடியோ காண்பரண்சிங் வசதிக்கு 23 கோடியே 83 லட்சம் ஒதுக்கீடு செய்ததற்கும், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிமன்ற நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள மின்னணு அறிவிப்பு பலகைக்கு 53 லட்சம் ஒதுக்கீடு செய்ததற்கும் தமிழக அரசுக்கு நன்றியையும் தெரிவித்தார்”  தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹிலரமானி.