மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக நூறு அடியை எட்டியுள்ளது. கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து மற்றும் தமிழகம் - கர்நாடக எல்லையில் தீவிரமடைந்துள்ள பருவ மழை காரணமாக மேட்டூர் அணையில் நீர்வரத்து வேகமாக அதிகரித்துவருகிறது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. கொள்ளளவு 93.47 டிஎம்சி. நடப்பு ஆண்டில் முதல்முறையாக செப்டம்பர் 25 ஆம் தேதி 100 அடியை எட்டியது. பின்னர் அக்டோபர் 13 ஆம் தேதி 100 அடியை எட்டியது. அடுத்து 19 ஆம் தேதியன்று நீர்மட்டம் 99 அடியாக குறைந்தது.
தற்போது மூன்று நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தீவிரமடைந்த மழையால், மேட்டூர் அணை நீர்வரத்து மீண்டும் அதிகரித்துவருகிறது. பாசனத்துக்கு 9 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணையில் திறப்பைவிட வரத்து அதிகமாக இருந்ததால், நேற்று (அக்டோபர் 24 ) மாலை அணையின் நீர்மட்டம் மூன்றாவது முறையாக 100 அடியை எட்டியது.