தமிழ்நாடு

மேட்டுப்பாளையம்: பாகுபலி யானையை பதறவைத்த குட்டி நாய் - வைரல் வீடியோ

மேட்டுப்பாளையம்: பாகுபலி யானையை பதறவைத்த குட்டி நாய் - வைரல் வீடியோ

Veeramani

மேட்டுப்பாளையம் குடியிருப்பு பகுதிகளில் இரவு முழுவதும்  சுற்றித்திரியும் பிரமாண்ட பாகுபலி யானையை அச்சுறுத்தி விரட்ட முயன்ற குட்டி நாயின்  துணிச்சல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் பாகுபலி யானையின் நடமாட்டம் கடந்த வாரம் துவங்கிய நிலையில் தற்போது சமயபுரம், கல்லார், குரும்பனூர்,  ஓடந்துறை என மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக அந்த யானை சுற்றித்திரிந்து வருவது இப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.



ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் முகாமிட்டு குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுமாக இருந்த பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானையை கும்கி யானைகளின் உதவியோடு பிடித்து அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவியை பொருத்திய பின்னர் அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் திட்டமிட்டனர். இதற்காக கடந்தாண்டு ஜூன் மாதம் மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு சிறப்பு வனத்துறை குழுக்கள் மூலம் மயக்க ஊசி செலுத்தி பாகுபலியை பிடிக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், பாகுபலி யானை இவர்களின் பிடியில் சிக்காமல் தந்திரமாக தப்பியபடி இருந்ததால் ஒரு மாத காலம் முயன்றும் பிடிக்க முடியாமல் இருந்ததால் ஆபரேஷன் பாகுபலி தோல்வியில் முடிந்தது. பிறகு பாகுபலி யானையும் மலைக்காட்டுக்குள் சென்று மறைந்தது. ஓராண்டு காலம் தலைமறைவு வாழ்வை முடித்து கொண்ட பாகுபலி கடந்த வாரம் மீண்டும் மேட்டுப்பாளையம் பகுதியில் நுழைந்து மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் வழக்கம் போல் நடமாட துவங்கியது. இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்த வனத்துறையினர் பாகுபலி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க துவங்கினர்.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள சமயபுரம் என்னுமிடத்தில் தினசரி இரவு நேரங்களில் பாகுபலி யானை சாலையை கடந்து ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது. ஒற்றையாக உலா வரும் பாகுபலி தன்னை விரட்ட முற்படும் வனத்துறையினரை மட்டும் அச்சுறுத்தி விட்டு அருகில் உள்ள புதர் பகுதியில் மறைவதும் பின்னர் மீண்டும் வெளியே வருவதுமாக போக்கு காட்டி வருகிறது.



சமயபுரம் பகுதியில் சாலையை கடந்து ஊருக்குள் நுழைந்து  காண்போரை கதிகலங்க வைக்கும் பிரமாண்டமான பாகுபலி யானையை அங்கிருந்த சிறு நாயொன்று குரைத்தபடி விரட்டி சென்று தனது எதிர்பை காட்டியதோடு, யானையின் வருகையை ஊர் மக்களுக்கு தெரிவிக்குபடி தொடர்ச்சியாக குரைத்து யானையின் பின்னே சென்றது. ஒருகட்டத்தில் கோபமடைந்த யானை நாயை நோக்கி பிளிறி அதனை விரட்ட முயன்றது, ஆனாலும் பயப்படாத நாய் கடைசி வரை யானையை துரத்துவதிலேயே குறியாக இருந்தது. இது அங்கு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வந்த வனத்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நேற்றிரவு சமயபுரம் வழியாக பவானியாற்று பகுதிக்கு சென்ற பாகுபலி இன்று அதிகாலை அதே வழியில் மீண்டும் திரும்பி வந்தது. பாகுபலியின் தொடர் நடமாட்டதால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.