தமிழ்நாடு

கட்டண சலுகை- புதிய அறிவிப்பு வெளியிட்ட சென்னை மெட்ரோ..!

கட்டண சலுகை- புதிய அறிவிப்பு வெளியிட்ட சென்னை மெட்ரோ..!

webteam

சென்னை மக்களின் அத்தியாவசிய தேவையின் அடையாளமாக, சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்னும் மாறவில்லை. அதற்கு மெட்ரோவில் பயணிப்பதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டுமே என்ற மக்களின் எண்ணம்தான் காரணம். ஆனால் மற்ற போக்குவரத்து வசதிகளை ஒப்பிடும் போது மெட்ரோவின் கட்டணம் ஒன்றும் அதிகம் இல்லை. 

அதிநவீன குளிர்சாதன வசதி, துல்லியமான நேரத்திற்குள் குறிப்பிட்ட இடத்திற்கு போய் சேர்வது, எக்காரணம் கொண்டும் காத்திருக்க தேவை இல்லாதது, மிகப் பாதுகாப்பான பயணம் என பல வசதிகளை கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவையில் அவ்வப்போது விழாக்கால சலுகைகளும் சேர்ந்து கொண்டால்... சும்மாவா? தீபாவளி பண்டிகை சலுகையாக மெட்ரோ கட்டணத்தில் அதிரடி குறைப்பை செய்தது நிர்வாகம். அதேபோல தங்களது மெட்ரோவில் பயணிப்பவர்களுக்கு சைக்கிள் வசதி, கேப் வசதி என பல முன்னேற்றங்களை  செய்து தர முன் வந்தது  நிர்வாகம்.

இப்போது மெட்ரோ கட்டணத்தில் அதிரடி சலுகையாக 50 சதவீதத்தை குறைத்துள்ளது மெட்ரோ நிர்வாகம். ஆனால் இந்தக் கட்டணக் குறைப்பு எல்லா தினங்களிலும் இல்லை. அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ பயணச் சீட்டுகளில் 50 சதவீத கட்டணத் தள்ளுபடி செய்து ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது மெட்ரோ ரயில் நிர்வாகம். ஆகவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று பரவலாக எதிர்பார்ப்பு நிலவுகிறது.