தமிழ்நாடு

மெட்ரோ ரயில் பணியாளர்கள் போராட்டம் வாபஸ் !

மெட்ரோ ரயில் பணியாளர்கள் போராட்டம் வாபஸ் !

Rasus

மெட்ரோ பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை திரும்பபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ பணியாளர்கள் 7 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் நிரந்தர பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர், மெட்ரோ ரயில் நிர்வாகம், மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் தரப்பில் இரண்டாம்கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை குரளகத்தில் நடைபெற்றது.

நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 8.30 மணி வரை நீடித்தது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையரின் அறிவுறுத்தலையடுத்து போராட்டத்தை திரும்பபெறுவதாக தொழிலாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.டி.யூ தலைவர் சவுந்தரராஜன், தங்கள் தரப்பு 22 அம்ச கோரிக்கைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் அடுத்தவாரம் அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும்‌ எனவும் கூறினார். இன்று முதல் பணியாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்புவார்கள் என்றும் வழக்கம்போல் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.