தமிழ்நாடு

டெல்டாவில் மீண்டும் மீத்தேன் திட்டம்

டெல்டாவில் மீண்டும் மீத்தேன் திட்டம்

webteam

கா‌விரி டெல்டா பகுதியில் தடை விதிக்கப்பட்டிருந்த மீத்தேன் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து மீத்தேன் திட்டம் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்டா பகுதிகளில் பூமிக்கு அடியில் 500 அடி முதல் ஆயிரத்து 650 அடி வரை பல்வேறு இடங்களில் 23 ஆயிரம் மில்லியன் டன் நிலக்கரி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பகுதி விவசாயபகுதி என்பதால் இதனை எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் என அரசு கருதியது. இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு மன்னார்குடி முதல் திருவிடை மருதூர் வரை நிலக்கரி மீத்தேனை மட்டும் எடுப்பது என முடிவெடுக்கப்பட்டு சர்வதேச ஓப்பந்தம் கோரப்பட்டது. இதன் அடிப்படையில், கிரேட்டர் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் மக்கள் கருத்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது விவசாயிகள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட மாநில அரசு கடந்த 2013ஆம் ஆண்டு மீத்தேன் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் 2015ம் ஆண்டு மாநில அரசு முழுமையாக தடை விதித்தது. இந்நிலையில், இப்பகுதியில் மீண்டும் ஆய்வு நடத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு புதிய ஆய்வறிக்கை ஒன்றினை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் விவாதித்த நிபுணர் குழு மீண்டும் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.