சென்னையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை மயிலாப்பூர் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். இதில் இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு கீழே மறைத்து வைத்திருந்த 18 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பறிமுதல் செயத போலீசார், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர் மயிலாப்பூரை சேர்ந்த விக்னேஷ்வர் என்பது தெரியவந்தது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், தனது சொந்த பயன்பாட்டிற்காக போதைப்பொருளை வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விக்னேஷ்வர் கொடுத்த தகவலின் பேரில் ஷேக் மொஹிதீன், இம்ரான், ரபிக் ஆகிய மூன்று பேரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை மாநில போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் ஒரு கிராம் ரூ.2000 முதல் ரூ.4000 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட போதை பொருளின் இன்றைய மார்க்கெட் மதிப்பு ரூ.50,000 ரூபாய் வரை இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.