24 மணிநேரத்தில் காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருப்பதுதான் தற்போது பல விவாதங்களுக்கு வித்திட்டிருக்கு... ஒருவருடத்தில் பெய்யும் மழை, ஒரேநாளில் பெய்தது ஏன்? இதனை முன்கூட்டியே கணிக்கமுடியாதது ஏன் என்ற பல கேள்விகள எழுப்புது.
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும் 33 இடங்களில் மிக கனமழையும் 12 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவானது. வடகிழக்குப் பருவ மழையை பொறுத்தவரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 44 சென்டிமீட்டர், இந்த காலகட்டத்தின் சராசரி அளவு 42 சென்டிமீட்டர் இது ஐந்து சதவீதம் இயல்பை விட அதிகம்.
எச்சரிக்கைகளில் மூன்று வகைகள் உள்ளன. 21 சென்டிமீட்டருக்கு மேலாக இருப்பது சிவப்பு நிற எச்சரிக்கை. வானிலை மையம் சார்பில் சிவப்பு நிற எச்சரிக்கை அரசிற்கு கொடுக்கப்பட்டுவிட்டது. அதிக கன மழை தொடர்பாக அரசுக்கு தொடர்ந்து எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
இத்தனை சென்டிமீட்டர் மழை பெய்யும் எனக் கணிக்க முடியாது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சியில் இந்த அளவிற்கு மழையை எதிர்பார்க்கவில்லை. கடந்த 14ஆம் தேதி முதல், மழை தொடர்பான தகவல்களை மாநில அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.