செய்தியாளர் அ.ஆனந்தன்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளான பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம், மண்டபம் கேம்ப், மரைக்காயர் பட்டினம், வேதாளை, சீனியப்ப தர்கா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
மண்டபத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் மழைநீர் முழங்கால் அளவு தேங்கியுள்ளதால் நோயாளிகள் மருத்துவமனைக்குள் வர முடியாமலும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களிலும் உள்ளே வர முடியாமலும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.
பாம்பன் சின்னப்பாலம் முந்தன்முனை உள்ளிட்ட கடற்கரை ஓரமுள்ள மீனவர்கள் குடிசைகளுக்குள் மழை நீருடன் கடல் நீர் புகுந்து வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் இருப்பதால் வீட்டில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதந்து வருகின்றன. இதனால் மீனவ மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
மேலும் அரியமான் கடற்கரை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மழைநீர் கடல் நீருடன் கலந்து கடற்கரை மணல் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து நிலப்பரப்பும் கடலும் தெரியாத அளவு இருந்து வருகிறது. இதனால் அப்பகுதிக்கு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மரைன் போலீசார் எச்சரித்துள்ளனர்
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டியது. 3 மணி நேரத்தில் 19 செமீ மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிகக் குறுகிய இடத்தில் வலுவான மேகக்கூட்டம் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.