கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகப்படியாக மைலாடி பகுதியில் 24 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் முழுவதுமாக கரையைக் கடந்து முடித்துள்ள நிலையில் காற்றின் வேகம் 130கி.மீ-140 கி.மீ வேகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக வட தமிழகத்தில் 40 கி.மீ வேகம் வரை காற்றுவீச வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வெப்பச்சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.