தமிழ்நாடு

7 மாவட்டங்களில் கன மழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு

Sinekadhara

காற்றின் திசை வேகமாறுபாடு மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டம் மணப்பூண்டி, முகையூர் ஆகிய இடங்களில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.