கடந்த அக்டோபர் 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. அதுமட்டுமில்லாமல் பொதுவாக அக்டோபர் மாதம் இறுதியில் உருவாகும் வடகிழக்கு பருவமழை இந்தமுறை முன்கூட்டியே தொடங்கியிருப்பதாகவும், அதனால் அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அக்டோபர் 15 மற்றும் 16-ம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு முதலிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டது. தொடர்ந்து அக்டோபர் 15-ம் தேதி ஏற்பட்ட கனமழைக்கு பிறகு காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக உருவாகியிருப்பதாக கூறப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அன்று ஒருநாள் முழுவதும் நல்ல மழை இருந்தபோதிலும், மறுநாள் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தெற்கு ஆந்திரா பக்கம் நகர்ந்து சென்றதால் தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் கடலில் புதியதாக இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாகவும், அது புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் தெரிவித்திருக்கும் தகவலின் படி, அரபிக் கடலில் அடுத்த 12 மணி நேரத்திலும், வங்கக் கடலில் அக்.22ஆம் தேதியும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவிருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் வங்கக் கடலில் உருவாகவுள்ள இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.