ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மாதிரி பொருளின் வயது ‘கிமு 905’ என்று, கார்பன் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இடம். பாண்டிய நாட்டின் தலைநகரான கொற்கை, ஆதிச்சநல்லூரில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருந்துள்ளது. இங்கு அழகாய்வு பணி 2004 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.
இந்த ஆய்வில் ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளன பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. ஆதிச்சநல்லூரில் இதுவரை 4 கட்ட அகழாய்வு நடைபெற்றுள்ளது. இந்த அகழாய்வு குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இங்கு எடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் சென்னையிலும், வெளிநாடுகளிலும் உள்ளன.
எனவே ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. இதே போல தூத்துக்குடி சிவகளை, பரம்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தக்கோரியும் காமராஜர் தனி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கார்பன் பரிசோதனைக்கும் மாதிரி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்பன் சோதனைக்காக புளோரிடாவிற்கு அனுப்பப்பட்ட இரண்டு பொருட்களின் முடிவுகள் வெளிவந்துள்ளது. அதில், ஒரு பொருளின் வயது கிமு 905, மற்றொன்றின் வயது கிமு 791 எனத் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் ஆய்வறிக்கை தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவை என மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அதே போல், சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கி.மு 395 ஆண்டு பழமையானவை எனத் தெரியவந்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள், தமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி எனத் தெரிய வருகிறது எனக் கருத்து தெரிவித்தனர். அத்துடன், கார்பன் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா? அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமா? என்பது குறித்து மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 11 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.