செய்தியாளர்: பிரவீண்
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதாப் என்ற இளைஞர், கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் கொண்ட பிரதாப், ethical hacking போன்றவற்றிலும் கற்று தேர்ந்துள்ளார். இத்தகைய சூழலில் தொழில் நுட்ப ரீதியில் Zero day எனக் கூறப்படும் அதாவது Face book, Instagram உள்ளிட்டவற்றின் தலைமை செயல் அதிகாரிகளே கண்டறிய முடியாத ஒரு சிக்கலை கண்டறிந்து, கவனம் பெற வைக்கும் செயலை செய்து காட்டியுள்ளார் பிரதாப்.
இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செக்ஷனில் சைபர் தாக்குதல் நடத்தி பயனாளர் மட்டுமின்றி செயலியின் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்களால் கூட அந்தப் பகுதியை காணவோ அணுகவும் முடியாத அளவிற்கு செய்யும் சிக்கலை கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இன்ஸ்டாகிராம் கமெண்ட் பகுதியில் GIF - Graphic Interchange Format பாணியில் இந்த சைபர் தாக்குதல் நடத்துவதை அவர் கடந்த ஜூலை மாதம் மெட்டா நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று விளக்கியுள்ளார்.
இதையடுத்து அவரது செயலை பாராட்டும் விதமாக மெட்டா நிறுவனம் அவருக்கு வெகுமதி அறிவித்துள்ளது. மேலும் சிறந்த ஆராய்ச்சியாளர்களை கௌரவிக்கும் மெட்டா நிறுவனத்தின் Hall of Fame பட்டியலிலும் மாணவர் பிரதாபின் பெயரை இணைத்துள்ளது.