தமிழ்நாடு

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் தற்கொலை?: உறவினர்கள் போராட்டம்

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் தற்கொலை?: உறவினர்கள் போராட்டம்

webteam

சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட நபர் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ் ஆரோக்கியராஜ்(42). இவர் தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை தரப்பில் 35 ஆயிரம் ரூபாயை முதலில் கட்டவேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அல்போன்ஸ் ஆரோக்கிய ராஜ் சகோதரர் முதல் தவணையாக 24 ஆயிரம் ரூபாய் கட்டி உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை மருத்துவமனையிலிருந்து போன் செய்து அல்போன்ஸ் ஆரோக்கியராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகம் முன் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அல்போன்ஸ் ஆரோக்கியராஜ் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து தகவலறிந்த பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்கப்போவதில்லை என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.