தமிழ்நாடு

மேல்மலையனூர்: பக்தர்கள் இன்றி அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம்

kaleelrahman

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் வழக்கப்படி பக்தர்கள் இன்றி எளிய முறையில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் மாதந்தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில், ஊஞ்சல் உற்சவமும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஐப்பசி அமாவாசையான நேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் திருக்கோயில் வழக்கப்படி பக்தர்கள் இன்றி எளிய முறையில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

ஐப்பசி அமாவாசை என்பதால் மூலவர் அங்காளம்மனுக்கு சீயக்காய், எண்ணைய், பால் மற்றும் தேன் போன்ற பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. உற்சவர் அங்காளம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தாள் ஏழு மாதங்களுக்குப் பிறகு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.