தமிழ்நாடு

"ஊடகங்கள் அரசை விமர்சித்து செய்தி வெளியிடுவதில் தவறில்லை" - சென்னை உயர்நீதிமன்றம் !

"ஊடகங்கள் அரசை விமர்சித்து செய்தி வெளியிடுவதில் தவறில்லை" - சென்னை உயர்நீதிமன்றம் !

jagadeesh

ஊடகங்கள் அரசை விமர்சித்து செய்தி வெளியிடுவதில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் ஊடகங்கள் மீது அரசியல் கட்சியினர் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதி அப்துல் குத்தூஸ் தன்னுடைய உத்தரவில் "ஜனநாயகத்தின் நான்காவது தூணாகவும், காவலர்களாக ஊடகங்கள் திகழ்கின்றன. நாட்டின் வளர்ச்சியில் ஊடகங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. கடந்த சில வருடங்களாக ஊடகம் உள்ளிட்ட ஜனநாயகத்தின் ஒவ்வொரு பகுதியும் சிதைந்து வருகிறது. அவற்றை விரைவில் சரிசெய்யாவிட்டால் அது தீ போலப் பரவி பேராபத்தாகவிடும். நம் நாட்டின் தேசியக் கொடி, தேசிய கீதத்தை மதிக்கும் நாம், நாட்டின் முக்கிய நோக்கமான உண்மையே வெல்லும் என்பதை சில நேரங்களில் மறந்து விடுகிறோம். நம் நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற இது மிகவும் முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு அனைத்து ஊடகங்களும் செயல்படும் என நீதிமன்றம் நம்புகிறது" என்றார்.

மேலும் அந்த உத்தரவில் " கட்டுப்படுத்த முடியாத நீரோடை கிராமப்புறங்களையும், பயிர்களையும் மூழ்கடிப்பதைப் போல, கட்டுப்பாட்டுக்குள் முடியாத பேனாவும் அழிவை ஏற்படுத்தும். இந்திய ஊடகங்கள் மிகவும் மதிப்பிற்குரியது என்பதால்தான் ஊடகங்களுக்கு இதுவரை கடினமான விதிமுறைகள் பிறப்பிக்கப்படவில்லை. ஊடகங்களின் முக்கிய நோக்கம் சேவை தான் என மகாத்மா காந்தி கூறியதை நினைவுக் கூற வேண்டும். ஊடகங்கள் தங்களை சுய ஆய்வு செய்து, அடுத்த தலைமுறையின் மேம்பாட்டுக்குத் துணையாய் நிற்க வேண்டும். ஊடகங்கள் அரசை விமர்சித்து செய்தி வெளியிடுவதில் தவறில்லை. அது ஒரு குழந்தை தன் பெற்றோரைப் பார்த்துத் திட்டுவது போலத்தான் கருத வேண்டும். அதற்காக அந்த குழந்தையின் மீது கடுமையாக நடக்க முடியாது" என்றும் கூறினார்.

அவதூறு வழக்கு குறித்து தன்னுடைய உத்தரவில் " அவதூறு வழக்கு என்பது அரிதாகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு முறை. ஆனால் அரசின் வெறுப்பைக் காட்டுவதற்கெல்லாம் அவசர கதியில் அவதூறு வழக்குகள் கூடாது. ஒரு அரசையும் அதன் குறைகளைப் பிற கட்சியினர் சுட்டிக்காட்டுவதை எப்படி தவறெனக் கூற முடியும். அதேபோல அந்தக் கட்சியினர் பேசுவதைச் செய்தியாக வெளியிட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகம் மற்றும் பத்திரிகைகளின் கடமை. எனவே பத்திரிகையாளர்கள் மீது இதுபோன்ற அவதூறு வழக்கு தொடரும் விவகாரத்தில் சாதாரண மனிதனைப் போல அரசு செயல்படாமல், முழுமையாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும். எனவே அரசியல் கட்சியினர் பேசிய செய்திகளை வெளியிட்டதற்காகப் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யப்படுகிறது" என்றார்.