சூதுபவள மணி x
தமிழ்நாடு

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு: சூதுபவள மணியில் சீறும் திமிலுள்ள காளை பதக்கம் கண்டெடுப்பு!

PT WEB

செய்தியாளர் - A. மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக சூதுபவள மணியில் சீறும் திமிலுள்ள காளை பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக சுமார் 1,500 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

1500 பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு!

கீழடியைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அகழ்வாய்வு பணியில் "கார்னீலியன்" என்றழைக்கப்படும் சூதுபவள கல்மணியில் குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சூதுபவள மணி

இது மோதிரத்தில் பதிப்பிக்கும் வகையில் உள்ளது. கடந்த இரண்டு கட்ட அகழாய்வில் 15 சூதுபவள கல்ணிகள் மணிகள் கிடைத்தன. செதுக்கு முறையில் சீறும் திமிலுள்ள காளை உருவம் கிடைக்கப்பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். இப்பதக்கம் 10.6 மில்லி மீட்டர் சுற்றளவும் 3.6 மில்லி மீட்டர் தடிமனும் 60 மில்லி கிராம் எடையும் கொண்டது.

இதுவரையில் சுடுமண்ணால் ஆன திமில் உள்ள காளைகள் கிடைத்த நிலையில், தற்போது சூதுபவள கல்லில் திமிலுள்ள காளை உருவம் பொறிக்கப்பட்டது கிடைத்திருப்பது சிறப்பாகும்.

சூதுபவள மணிகள் சிறப்பு!

சூதுபவள மணிகள் செய்யக்கூடிய மூலக்கற்கள் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டும் கிடைக்கின்றன. இதுபோன்று கல்மணிகளில் உருவங்கள் குழிவான முறையில் உருவாக்கப்படும் தொழில்நுட்பம் உரோம் நாட்டில் சிறப்புற்றிருந்தது.

இதுபோன்று கீழடி, சேரர் துறைமுக நகரமான முசிறி(பட்டணம்) அகழாய்வுகளில் சூதுபவள கல்மணியில் விலங்கின உருவம் பொறிக்கப்பெற்ற பதக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கீழடியில் காட்டுப்பன்றி உருவமும் முசிறியில் பாயும் சிங்கமும் கிடைக்கப்பெற்றுள்ளன.

சூதுபவள மணி

கீழடியிலும் முசிறியிலும் கிடைக்கப்பெற்ற சூதுபவள மணியால் ஆன பதக்கங்கள் சங்க காலத்தைச் சார்ந்தவை. அதேபோன்று வெம்பக்கோட்டையிலும் கிடைத்திருப்பது சிறப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பதிவில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழ்வாய்வில் இதுவரையிலும்,

  • சுடுமண் முத்திரை,

  • அகல் விளக்கு மற்றும் கல்பந்து,

  • கல்லாலான சில்வட்டு,

  • சுடு மண்ணால் ஆன சதுரங்க ஆட்டக்காய்கள்,

  • சுடுமண்ணால் ஆன வடித்தட்டு (சல்லடை),

  • சுடும் மண்ணால் ஆன புகைப்பிடிப்பான் கருவி மற்றும் சுடு மண் குழாய்,

  • சங்கு வளையல்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள்,

  • நாயக்கர் கால செம்பு நாணயம்,

  • மாவுக் கல்லால் ஆன கழுத்தில் அணியக்கூடிய தொங்கணி,

  • உடைந்த நிலையில் பெண்ணின் தலைப்பகுதி,

  • கண்ணாடி மணிகள்,

  • வட்ட சில்லு,

  • அகல் விளக்கு,

  • எலும்புகள்,

  • சங்கு வளையல்கள்

என இதுவரை 1500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.