போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்  முகநூல்
தமிழ்நாடு

புயல் பாதிப்பு: வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவ போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்! - தமிழக அரசு

புயல் காரணமாக 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவ போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

PT WEB

புயல் காரணமாக 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவ போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயலின் போது பெய்த பெருமழையில் சிக்கி பல்லாயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் பழுதடைந்தன. இந்நிலையில், வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது.

அது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “பழுதுபட்ட வாகனங்களை சர்வீஸ் சென்டர்களுக்கு கொண்டு செல்ல போதிய மீட்பு வாகனங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு விரைந்து எடுத்த நடவடிக்கைகள் காரணமாக 3 ஆயிரத்து 500 வாகனங்கள் பழுது நீக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு கிடைக்கப்பெற்றுள்ளது . இனிவரும் நாட்களில் இது விரைவுபடுத்தப்படும். மேலும்,  இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து சர்வேயர்களை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகனங்கள் நீரில் மூழ்கியிருக்கும் பட்சத்தில் அவற்றை இயக்காமல் உடனடியாக சேவை மைய எண்களை தொடர்பு
கொண்டு ஆலோசனைகளை பெற்று அதன்படி செயல்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற அறிவுறுத்தல் 3 லட்சத்திற்கு மேற்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலமும் வாட்ஸ்ஆப் மூலமும் அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களில் இழப்பு 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் இருக்கும் பட்சத்தில் அதற்கு விரைவாக இழப்பீட்டை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.